மஹிந்தவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜித் பி பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலையான சேமிப்பு வைத்திருப்பவர்களின் வட்டி தொகையை குறைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் உள்ளிட்ட நிலையான சேமிப்பாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் நிலையான சேமிப்பாளர்களின் மீது அரசாங்கம் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேர்தலுக்கு இன்னும் சிறிதுகாலமே இருக்கின்றது என்பதை அறிந்திருந்தும் இவ்வாறு செயற்படும் அரசாங்கம் தேர்தலின் பின்னர் எவ்வாறு செயற்படும் என்பதை மக்கள் விளங்கி கொண்டே எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் இளைய புதல்வன் ரோஹித்த ராஜபக்ஷ தந்தைக்கு உடல்நலக் குறைவின் காரணமாக அவர் சார்பில் தான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுப்படுவதாக தெரிவித்துள்ளார். தந்தை சார்பில் மகன் பிரசாரத்தில் ஈடுப்படுவதில் எவ்வித தவறும் இல்லை.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ என்பவர் வெறுமனே வேட்பாளர் மாத்திரம் கிடையாது. அவர் நாட்டின் பிரதமர், மற்றும் நிதி அமைச்சரும் கூட இந்நிலையில் இவர் உடல்நலம் குறைந்திருந்தால் அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இவரது உடல் நலகுறைவுதான் காரணமா ? என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அதனை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
0 Comments