Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

எம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி!



நல்லாட்சி அரசாங்கத்தினால் புதைக்கப்பட்ட கண்ணிவெடியே அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தம் என்று விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச, கண்ணி வெடியை அகற்றும் போது உரிய வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் அவசரப்பட்டால் விளைவுகள் பாரதூரமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை போன்று எம்.சி.சி. ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய முடியாது எனத் தெரிவித்த அவர், முறையான வழிமுறைகளின் ஊடாகவே ஒப்பந்தம் நீக்கப்படும் எனவும் கூறினார். மேலும் அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இருந்த போதிலும் இந்த ஒப்பந்தம் தீங்கானது என்று மீளாய்வுக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இறுதிமுடிவை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தரும் கைத்தொழில் அமைச்சருமான விமல் வீரவன்ச, இந்த ஒப்பந்தம் ஒரு கண்ணிவெடியைப் போன்றது என்றும், வேகமாக முடிவை எடுத்துவிட முடியாது என்றும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு குழுவினரது அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எம்.சி.சி ஒப்பந்தத்தின் அறிக்கையை முன்வைத்தார். அமைச்சரவை உறுப்பினர்கள் 14 பேரும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆராய்ந்து தமது நிலைப்பாட்டை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

எம்.சி.சி ஒப்பந்தத்தை ஏன் அரசாங்கம் இதுவரையில் நீக்கவில்லை, தேர்தலுக்கு பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று எதிர் தரப்பினர் தற்போது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். எம்.சி.சி. ஒப்பந்தம் நல்லாட்சி அரசாங்கத்தினால் புதைக்கப்பட்ட ஒரு கண்ணி வெடி என்றே குறிப்பிட வேண்டும். கண்ணிவெடியை அகற்றும் போது பொறுமையாகவும், அவதானமாகவும் உரிய வழிமுறைகளை கையாள வேண்டும்.

அவசரப்பட்டால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும். எதிர் தரப்பினர் குறிப்பிடுவதை போன்று எம்.சி.சி ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய முடியாது. ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டு 2017 மற்றும் 2018 ஆகிய காலப்பகுதிகளில் இரண்டு ஏற்பாடுகளின் ஊடாக 10 மில்லியன் ரூபா நிதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் ஒருபோதும் கைச்சாத்திட மாட்டோம். என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சர்வதேச தரப்பில் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிற நாட்டின் நிதி கிடைக்கின்றது என்ற காரணத்திற்காக நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அரசியலமைப்பின் ஊடாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை சீர் செய்வதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை கோருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments