Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ராஜிதவின் சவாலுக்கு ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட பதில்!



முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவன்காட் நிறுவனத்திடமிருந்து 200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தப் பணம் கைமாறப்பட்டதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதனை இன்றைய தினம் ஊடகங்களுக்கு முன்பாகவும் காண்பித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு - இராஜகிரியவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக தன்மீது குற்றம் சுமத்தும் முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, அதனை முடிந்தால் நிருபித்துக்காட்டும்படி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் சவால் விடுத்திருந்தார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, இன்றைய தினம் ஊடகங்களுக்கு முன்பாக பணம் கைமாறப்பட்டதற்கான சில ஆவணங்களையும் முன்வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ராஜித சேனாரத்ன எனக்கு சவால் ஒன்றை முன்வைத்திருந்தார். அவன்காட் நிறுவனத்திடமிருந்து 200 இலட்சம் ரூபாவை கப்பமாகப் பெற்றிருந்தால் அதனை நிரூபித்துக்காட்டுமாறு என்னிடம் சவால் விடுத்துள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்ற போது சம்பந்தப்பட்ட வர்த்தகர் என்னை சந்தித்து இதுகுறித்து தெரிவித்த போது அதனை நான் நம்பவில்லை.

ஆதாரங்களைக் காண்பிக்கும்படி கோரினேன். என்னிடம் தற்சமயம் இருக்கின்ற ஆவணங்கள் எனக்கு 2015ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றதாகும். 50 இலட்சம் ரூபா பெறுமதியிடப்பட்ட காசோலை 2015ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 11ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்தக் காசோலை பணமாக மாற்றப்பட்டதற்கான ஆவணமும் கிடைத்துள்ளது. ஜுன் 14ஆம் திகதி மீண்டுமொரு 50 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டு அதுவும் பணமாக வங்கியில் மாற்றப்பட்டுள்ளது.

அதன்பின் 2015ஆம் ஆண்டு ஜுலை 8ஆம் திகதியும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு பற்றுச்சீட்டுக்களும் காணப்படுகின்றன. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நெருக்கமான ஒரு மருத்துவர் இந்தப் பணத்தை பற்றுச்சீட்டில் கையெழுத்திட்டு பெற்றுள்ளார்.

இந்தப் பிரச்சினையை அமைச்சரவையில் கடந்த காலத்தில் பேசியபோது அவன்காட் நிறுவனத்தின் பிரதானி நிஸ்ஸங்க சேனாதிபதி தனக்கு 200 இலட்சம் ரூபா வழங்கியதாகவும், ஆனால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிய போதிலும் அவர் இன்னும் வந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையிலிருந்த எந்தவொரு உறுப்பினரிடத்திலும் கேட்கலாம். ராஜித சேனாரத்ன, அவன்காட் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றதை நிரூபித்துக்காட்டுமாறு சவால் விடுத்தார். அந்த சவாலுக்கு அமைய அதனை நான் இன்று நிரூபித்துக்காட்டியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments