Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

புவனேகபாகு மன்னன் கட்டடம் இடிப்பு விவகாரம்; சட்டத்தை கையிலெடுத்த ஜோன்ஸ்டன்! மஹிந்தவே பொறுப்பு



ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருணாகல் மேயரை கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்திருப்பது எவ்வாறு? இதுவா நாட்டின் சட்டம்? அவர் தெரிவித்துள்ள கருத்து பாரதூரமானதாகும். அவர் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். ஆணைக் குழுவை நியமிக்காமல் உடனடியாக குருணாகல் நகர மேயர் கைது செய்யப்பட வேண்டும். என்று மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

நேற்று மாலை நீர்கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விஜித்த ஹேரத் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 72 வருட காலமாக இரு பிரதான கட்சிகளே நாட்டை ஆட்சி செய்து வந்தன. 72 வருடங்களின் பின்னர் மேலும் ஐந்து வருட காலத்திற்கு நாட்டை ஆட்சி செய்யும் தேர்தல் இதுவாகும். நாடாளுமன்றம் நாட்டை ஆளுகின்ற இடமாகும். இதன் காரணமாகத்தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கு கிட்டத்தட்ட நான்கரை கோடி ரூபா செலவாகிறது.

இந்த தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா செலவாகிறது. அதாவது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கு ஆயிரம் கோடி ரூபா செலவாகிறது. அதுமாத்திரமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதம் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. அத்துடன் உறுப்பினரின் ஏனைய கொடுப்பனவுகள் வரப்பிரசாதங்களுக்காக ஐந்து வருட காலத்தில் கோடிக் கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகிறது.

இவ்வாறு மக்களின் பாரிய தொகை பணம் செலவிடப்படுவது எதற்காக? நாடாளுமன்றம் என்பது நாட்டை நிர்வகிக்கின்ற இடமாகும். ஆந்த இடம் சரியாக இருந்தால் நாட்டின் எதிர்காலம் சரியான இடத்தை நோக்கி பயணம் செய்யும். தவறினால் தவறான பக்கத்திற்கு பயணம் செய்யும்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து எட்டு மாத காலமாகிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசு அத்தியாவசிய பொருட்களின் மீது விசேட வரியை அறவிடுகிறது.

இதன் காரணமாக விலைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம் அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கவிருந்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அரச நிர்வாக சேவையிலுள்ளவர்களுக்கு வழங்கவிருந்த 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டது. ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜனவரி முதல் அதிகரிக்கப்படவிருந்த ஓய்வூதிய உயர்வு நிறுத்தப்பட்டது. இவை எல்லாம் கொரோனா ஆரம்பமாவதற்கு முன்னர் நடந்தவைகளாகும்.

ஜனாதிபதி தேர்தலின் போது முன்னர் 'ஒரு நாடு ஒரு நீதி' என்று கூறினார்கள். கருணா, குருணாகல் நகராதிபதி ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. ஆயினும் அங்குலான பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்ததையடுத்து பிரதேச மக்கள் கோபம் அடைந்து பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டபோது, தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த மூன்று சம்பவங்களிலும் கருணாவுக்கு ஒரு நீதி. நகராதிபதிக்கு ஒரு நீதி. அங்குலானவில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு இன்னொரு நீதியை அரசு மேற்கொண்டது. தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு என்றால் தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு இருக்கும்?

எல்லாவற்றிலும் விட கவலைக்குரிய விடயம் மக்கள் இவர்களின் பின்னால் இருப்பதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குருணாகல் புவனேகுபாகுவின் அரசபை மண்டபம் உடைக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கதாகும். இது பிணை வழங்க முடியாத குற்றச் செயலாகும். ஆணைக் குழுவை நியமிக்காமல் உடனடியாக நகர மேயர் கைது செய்யப்பட வேண்டும். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருணாகல் மேயரை கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்திருப்பது எவ்வாறு? இதுவா நாட்டின் சட்டம்? அவர் தெரிவித்துள்ள கருத்து பாரதூரமானதாகும்.

அவர் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலாசார அமைச்சராவார். அதுமட்டுமன்றி அவர் குருணாகல் மாவட்ட உறுப்பினராவார். அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுபவராவார். பிரதமரும் இதற்கு பதில் கூற வேண்டும். பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அங்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஹென்ரி ரொஸைரோவும் இது தொடாபில் கருத்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments