அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கோமாரி வாடியடி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று கரையொதிங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கோமாரி கடற்கரையில் கரையொதியுள்ளதுடன் இதனை பார்வையிடுவதற்காக கிராம மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற கோமாரிப்பகுதி இராணுவம் மீனை பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கும் மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவ் இராட்சத மீனை துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டதனை அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் புதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் ரீ.சுபோதரன் தெரிவித்தார்.
இதேவேளை அம்பாறை மருதமுனை - பெரியநீலாவணை கடற்கரையில் இன்று இராட்சத சுறாமீன் பிடிபட்டுள்ளது. சுமார் 20 அடி நீளமான 1500 கிலோவிற்கும் அதிகமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். கரைவலை மீனவர்களது வலையில் சிக்கிய இராட்சத மீனை பார்வையிட பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர்.
அரிய வகை புள்ளி சுறா பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டது. இவ்விரு மீன்களையும் அதிகளவான மக்கள் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர்.
0 Comments