Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

இலங்கை வானொலி, ஒலிபரப்புக்கலைக்கு கிடைத்த பொக்கிஷம் அமரர் சி.நடராஜசிவம்



இலங்கை வானொலி, ஒலிபரப்புக்கலைக்கு வழங்கிய ஓர் ஒப்பற்ற வானொலிக்கலைஞர் அமரர் சி.நடராஜசிவம் அவர்கள்.

இலங்கை வானொலி கலைக்கூடத்துக்குள் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றச் சென்று வானொலிக் கலையில் உயர்ந்தவர்களில் அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களும் ஒருவர்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக ஊடகவானில் பயணித்த பல்முக ஆற்றல் படைத்த அறிவிப்பாளர்.

மூத்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட வானொலிக் கலையை மிகச்சிறப்பாகப் பேணி வந்தார்.

ஒரு வானொலி அறிவிப்பாளரிடம் என்னென்ன ஆளுமைகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் இவரிடம் இருந்தது.

‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதற்கமைய இளமைக்காலத்தில் இந்த ஒலிபரப்புத்துறைக்குள் பிரவேசித்துவிட்டதால் வானொலி வல்லாளராகி உயர முடிந்தது.

நாடகங்களில் நடித்தார், நாடகங்களைத் தயாரித்து வழங்கினார். இலங்கை வானொலியில் எல்லாவிதமான நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்தார்.

இலங்கை வானொலியில் பதியமிடப்பட்டவர்கள் தமிழ் வானொலிக்கலை வரைவிலங்கணங்களிலிருந்து விலகாது காத்திரமாகப் பணியாற்றினர்.

இதில் நடராஜசிவம் அவர்களும் நேர்த்தியான ஒலிபரப்புக்கலைப்பணிபுரிந்தவர்.

சாதாரணமாக நேரம் அறிவிப்பது முதல் கலையகத் தொடர் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பது வரை ஒவ்வொரு விடயத்திலும் அன்றைய காலகட்ட அறிவிப்பாளர்கள் சிரத்தையுடன் செயற்பட்டுவந்தார்கள்.

இதில் நடராஜசிவம் அவர்கள் மிகவும் குறிப்பிட்டு விழிக்கத் தக்கவராக விளங்கினார்.

நடிப்புத்துறையிலும் பெயர் பெற்ற இவர், திரைப்படங்களிலும் நடித்தார், சில திரைப்படங்களில் நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். சிங்களத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

இதனால் பெரும்பான்மையின மக்கள் மத்தியிலும் புகழ் பெற்றார். ரூபவாஹினி தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றில் நடித்தார்.

இலங்கை வானொலி ஆளுமை மிக்க அறிவிப்பாளர்கள் ஒரு காலகட்டத்தில் தமக்கெனப் பாதை வகுத்து வெளிவந்தனர்.

அவ்வேளை கொழும்பில் சூரியன் எவ்.எம் ஊடகம் நடராஜசிவம் அவர்களை வரவேற்று உயர் பதவி வழங்கியது.

அங்கேயும் வானொலித்துறை ஆளுமையை நிலைநாட்டி பல புதிய,இளைய அறிவிப்பாளர்களின் வருகைக்கு வழி கோலினார்.

நடராஜசிவம் என்கின்ற வானொலிக்கலை ஆளுமையாளரிடம் ஒலிபரப்புக் கலை பயின்ற பல இளம் அறிவிப்பாளர்கள் இன்று உலகெங்கும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆங்காங்கே இயங்கும் ஒலி-ஒளி ஊடகங்களில் பணியாற்றி வருகின்றார்கள்.

தங்கள் குருவை இழந்துவிட்ட நிலையில் அவரிடம் தாம் ஒலிபரப்புக்கலை பயின்ற நினைவுகளை மீட்டி நடராஜசிவம் அவர்களை நினைவுகூர்கிறார்கள்.

‘பேசாத வார்த்தைக்குப் பெறுமதி அதிகம்’ வானொலி ஒலிபரப்பில் இது பேணப்படல் அவசியம். ஒரு சொல் தவறாகச் சென்றுவிட்டால் அதனை மீளத் திருத்த முடியாது.

பேசுவதற்கு முன்னர் சிந்தித்து எழுதிப் பேசுவதே சிறந்தது. சமூக வலைத்தளங்களின் இன்றைய பரபரப்பு வானொலிக்கலைஞர் நடராஜசிவம் அவர்களின் புகழை உலகெங்கும் பரப்புகிறது.

பாராட்டுக்கள், வாழ்த்துகள் தாராளமாகப் பெற்று ஒலிபரப்புக்கலைப்பணியை நிறைவாக மேற்கொண்டார், வாழ்வில் நிறைவு கண்டார்.

வானொலிப்பணியில் இருக்கும் போது அவர் விடைபெற்றால் மீண்டும் வருவார், குரல் தருவார் என நேயர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்.

அவர்களை ஒரு போதும் நடராஜசிவம் அவர்கள் ஏமாற்ற மாட்டார். ஆனால், அவர் வாழ்விலிருந்து விடைபெற்றுள்ளார். இனி அவர் வர மாட்டார்.

தமிழ் வானொலிக்கலை தரணியில் தொடரும் வரை ‘கலையரசு’ அறிவிப்பாளர் சி.நடராஜசிவம் அவர்களின் புகழ் நிலைத்திருக்கும்.

Post a Comment

0 Comments