Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

என்னைப்பற்றி பொய் சொல்ல வேண்டிய தேவை கருணாவுக்கு இல்லை: சீற்றம் கொண்டுள்ள மனோ கணேசன்நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ அல்லது ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ பேசியதில்லையென முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சரும், பாராளுமன்ற வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உண்மையில் போர்நிறுத்த காலத்தில் சட்ட பூர்வமாக தென்னிலங்கையில் இருந்து பலர் கிளிநொச்சி சென்று நிகழ்வுகளில் கலந்துக்கொண்டார்கள்.

அப்படி ஒருமுறை பொங்கு தமிழ் விழாவில் நான் உரை நிகழ்த்தும் போது, “இலங்கையில் தமிழ் தேசியமும், சிங்கள தேசியமும் ஒன்றாய் வாழ இன்னமும் அவகாசம் இருக்கிறது. இரண்டு இனங்களுக்கும் இடையில் சமத்துவம் இருக்க வேண்டும். சமத்துவம் இல்லாவிட்டாலேயே பிரிந்து செல்லும் தேவை ஏற்படுகிறது” என்று தான் நான் பேசினேன்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் பொங்கு தமிழ் விழாவிற்கு சென்று அந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாக, புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர், இந்நாள் அரசு சார்பு வேட்பாளர் கருணா கூறியுள்ளார்.

இது இதற்கு முன்னர் பல சிங்கள அடிப்படைவாதிகள் என் மீது சுமத்திய குற்றச்சாட்டு தான். இப்போது புதிதாக நண்பர் கருணாவும் சொல்கிறார். அவ்வளவுதான்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், முன்னாள் எம்.பி அடைக்கலநாதன் ஆகியோர் தொடர்பிலும், கருணா இப்படியே குற்றம் சாட்டுகிறார்.

அவர்களை பற்றி நான் பேச போவதில்லை. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என எண்ணுகிறேன். நான் என்னைப் பற்றிய கருத்துகளுக்கு மட்டும் பதில் கூறுகிறேன்.

என்னைப் பற்றி பொய் சொல்ல தேவை கருணாவுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே, நண்பர் கருணா என்னைப்பற்றி விளக்கமில்லாமல் பேசுகிறார் என நினைக்கிறேன்

“இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதத்தை கையில் ஏந்தி, எழுந்து வாருங்கள்.” என்று நான் கூறியதாக, அரசாங்கத்தின் சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில், அன்றைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில், செய்தி ஒளிபரப்பப்பட்டது.

அதை செய்தவர் யுத்தம் நடந்தபொழுது யுத்த அறிக்கைகளை சிங்கள மக்களுக்கு சுடச்சுட வழங்கி பிரபல்யமான சமன் குமார ராமவிக்ரம என்ற ஊடகவியலாளர் ஆவார்.

உண்மையில் நடந்தது என்ன? போர் நிறுத்த காலத்தில் அந்த விழாவிற்கு தென்னிலங்கையில் இருந்து பல அரசியல்வாதிகள் சென்று வந்தனர்.

ராஜபக்ஷ அரசாங்கத்தில் அப்போதும், அதற்கு பின்னரும் இருந்த பல தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள் புலிகளின் அரசியல்துறையுடன் தொடர்பு கொண்டவர்கள்தான். புலிகளுக்கு தடை விதிக்கப்பட முன் அது அன்று சட்ட விரோத செயற்பாடாக கருதப்படவில்லை.

கிளிநொச்சியில் நடைபெற்ற அந்த ஒரு பொங்கு தமிழ் விழாவில் நானும் கலந்துகொண்டேன். பொங்கு தமிழ் விழா என்பது அரசியல் துறை நிகழ்வு என்பது கருணாவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

கிளிநொச்சி விழாவில் நான் ஆற்றிய உரையை சமன் குமார திரித்து சிங்களத்தில் தப்பு தப்பாக சொன்னதால் தான் அந்த உரை சர்ச்சைக்குள்ளாகியது.

“ஆயுதம் தூக்குங்கள்! இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்குங்கள்!” என்று நான் புலிகளின் மேடையில் ஏறி இரண்டு கைகளையும் உயர்த்தி ஆட்டி நான் பேசியதாக சமன் குமார எனது தமிழ் பேச்சை திரையில் காட்டி பின்னணியில் சிங்களத்தில் கூறும் பொழுது சிங்கள மக்கள் மத்தியிலே சர்ச்சை ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இந்த தப்பைக்கூட தப்பில்லாமல் செய்வதற்கு இந்த சமன் குமாரவிற்கு அறிவு இருக்கவில்லை.

உண்மையில் புலிகளின் மேடையில் ஏறி நான் என்ன பேசினேன்? “இந்நாட்டிலே சிங்கள தேசியமும், தமிழ் தேசியமும் இணைந்து ஒரே வட்டத்திற்குள்ளே வாழ்வதற்கு இன்னமும் இடம் இருக்கின்றது. ஆனால் ஒரே நிபந்தனையாக இரண்டுக்கும் இடையில் சமத்துவம் நிலவ வேண்டும்” இதுவே எனது பேச்சின் சாராம்சமாக இருந்தது.

உண்மையில் அச்சந்தர்ப்பத்தில் விடுதலை புலிகள், அரசியல், இராணுவ பலத்தில் அதி உச்சத்தில் இருந்தார்கள். அன்று அவர்களது மேடையில் ஏறி தமிழ் ஈழத்தை பற்றி பேசாமல் ஐக்கிய இலங்கையை பற்றி நான் பேசி இருக்கின்றேன். அதுவும் தமிழில் பேசியிருக்கிறேன்.

இதை புரிந்துகொள்ளக்கூடிய சிங்கள அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், உண்மையிலேயே அவர்கள் எனக்கு தேச அபிமானி பட்டம் வழங்கி இராமநாதனை வண்டியில் ஏற்றி இழுத்து சென்றதை போல, என்னையும் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்.

இருப்பினும் இங்குள்ள இனவாத முட்டாள்கள் எனது பேச்சை திரிபுபடுத்தி எனக்கு இனவாத சேறு பூசினார்கள். இப்போது அதையே தமிழ் மொழியில் நான் பேசுவதை புரிந்துக்கொள்ள கூடிய கருணாவும் செய்கிறார்.

சம்பந்தனும், அடைக்கலநாதனும், நானும் இடம்பெறும் அந்த காணொளி, கருணா சொல்வதைபோல், பரம இரகசியம் கிடையாது. யூடியூப் (You Tube) அலைவரிசைக்கு போய் அந்த காணொளியை யாரும் பார்க்கலாம். அதை பார்த்தால் உண்மையில் நான் என்ன பேசியுள்ளேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கருணா அதை பார்த்து நான் அங்கே என்ன பேசுகிறேன் என்பதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.

நான் தமிழ் ஈழத்தை விரும்பும் தமிழ் அடிப்படைவாதியும் அல்ல. இனங்களுக்கிடையில் அரசியல் சமத்துவத்தை ஏற்காத சிங்கள அடிப்படைவாதியும் அல்ல.

நான், அரசியல் நிலைப்பாடுகளை காலத்துக்கு காலம், திடீர் திடீரென மாற்றிக்கொள்ளும் அரசியல் சந்தர்ப்பவாதியும் அல்ல. உண்மையில் நான் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் ஒரே நாட்டுக்குள்ளே சமத்துவமாக வாழவேண்டும் என கனவு காணும் ஒரு ஸ்ரீலங்கா தேசியவாதி.

இலங்கை அரசியல் பரப்பில் இன்று என்னை எவராவது புரிந்துக்கொள்ள மறுப்பார்கள் எனில் அது என்னை விட என்னை புரிந்துக்கொள்ள மறுப்பவர்களுக்குதான் நஷ்டம். இதை காலம் நிரூபிக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments