ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் 300 பேர் வரையில் பச்சைநிற தொப்பி அணிந்து ஊடக சந்திப்பை நடத்திவிட்டு மகிந்தானந்த அளுத்கமகேயுடன் கைகோர்த்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொப்பியை அணிந்து அவருக்கு ஆதரவளித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் கங்கே இஹல பிரதேச சபைத் தலைவர், பஸ்பாகை கோரளை தலைவர், நாவலப்பிட்டி நகரசபை எதிர்க் கட்சித் தலைவர் உட்பட பிரதேச, நகர சபை உறுப்பினர் தங்களின் ஆதரவினை வழங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மஹிந்தானந்த அளுத்கமகே, இன்றய தினம் நாவலபிட்டி கங்கே இஹல கோரளை பிரதேச சபையிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் எட்டு உறுப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்கள் 1000 பேரும் எம்மோடு இணைந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள் இவர்களுடைய தாய், தந்தையர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்துள்ளனர். அதே நேரம் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்களும் இணைந்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இவர்கள் ஏன் எம்மோடு இணைந்தார்கள் என்றால், இவர்களுக்கு இதுவரை காலமும் எந்தவிதமான அபிவிருத்திகளையும் மேற்கொண்டதில்லை, கங்கே இஹல பிரதேச சபையில் எட்டு பிரதேசசபை உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தார்கள் அந்த எட்டுப் பேரும் எம்மோடு இணைந்து கொண்டார்கள்.
கங்கே இஹல பிரதேசசபையில் எதிர்கட்சி ஒன்று இல்லை நாவலபிட்டியில் மாத்திரமல்ல ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி சரியாக செயற்படவில்லை என கூறிதான் சஜித் பிரேமதாஸாவைக் கொண்டு வந்தர்கள் அவரும் அப்படித்தான் மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை. ஐக்கிய தேசிய கட்சியினர் ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தார்கள் அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்?
படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதில்லை, வீதி அபிவிருத்தி செய்யவில்லை, குடி நீர் வசதி வழங்கியதில்லை, ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஊடாக ரணிலும் லக்மன் கிரியல்லவும் தான் இலாபத்தை அனுபவித்தனர். ஆகையால் தான் மக்கள் இன்று எமது பக்கம் வந்துள்ளார்கள்.
நீங்கள் எல்லோரும் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கின்றீர்கள் எல்லோரையும் நான் பார்த்துக் கொள்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments