செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் என்பவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் என்ற நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேசு அரசரெத்தினம் (கே.கே.அரஸ்) என்பவர் குறித்த பகுதியில் பிரசார நடவடிக்கையை முடித்து விட்டு இவரது கடைக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளார்.
எனது கோட்டை, எனக்குரிய இடம், இங்குள்ளவர்கள் எனது ஆதரவாளர்கள், நீங்கள் இங்குள்ள மக்களை உங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்ல வேண்டாம் என்றவாறு மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளதாக வேலாயுதம் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 2012ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் ஆதரவாளர்களால் வியாபார நிலையம் எரிக்கப்பட்ட நிலையில் வழக்கு இடம்பெற்று வந்தது.
இவர்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து நாட்டின் நிலைமை சிரான நிலையில் மீண்டும் வந்து வியாபார நடவடிக்கையினை ஆரம்பித்து வந்தேன். இந்த நிலையில் கடந்து ஐந்து மாதங்களுக்கு முன்னர் வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் சமாதானமாக செல்வோம் என்று கூறியதன் பிற்பாடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனால் அச்சமின்றி இருந்தோம். ஆனால் தற்போது மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேசு அரசரெத்தினம் (கே.கே.அரஸ்) என்பவர் மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.
0 Comments