இனவாதங்களை பரப்புவதனூடாக வாக்குகளை பெறலாம் என்கின்ற கருத்து அண்மைக் காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா - சூடுவெந்தபுலவு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இனவாத சிந்தனையை வளர்ப்பதனூடாக ஒரு இனத்தின் அழிவை அல்லது ஒரு இனத்தின் வேதனையை இன்னோர் இனத்துக்கு சொல்லி அதனூடாக வாக்கு சேகரிக்கலாம் என்று கடந்தகால செயற்பாடுகளை நாங்கள் பார்க்கின்றோம்.
ஆனால் இன்று கருணாவோடு இணைந்த அணியினர் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேச்சையும் அவரை சார்ந்த அரசாங்கத்தை சேர்ந்த சிங்கள மக்களிடம் இன்னுமொரு பேச்சையும் பேசுவதை நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வோடு உள்ளவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் வேறு விதமாக பேசமாட்டார்கள்.
பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் யதார்த்தத்தை புரிந்து இந்த நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஜனநாயகம் மிளிரக்கூடிய நல்லதொரு ஆட்சிக்காக நல்லதொரு பாராளுமன்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பணியாற்றினோமோ எவ்வாறு எமது கடமையை மனச்சாட்சியோடும் நேர்மையோடு எம்மை தெரிவு செய்த மக்களுக்கும் அதேபோல் தெரிவு செய்யாத மக்களுக்கும் எங்கள் கடமையை ஆற்றியிருக்கின்றோம்.
அதுபோலவே எதிர்காலத்திலும் இதைவிட இரண்டு மடங்கு ஆசனத்தினை இந்த மக்கள் எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளதுஎன தெரிவித்தார்.
0 Comments