தேர்தல் காலங்களில் கட்சி விட்டு கட்சி தாவும் செயற்பாடுகள் இடம்பெறுவது வழமையே அந்த வகையில் இன்றைய தினம் இரண்டு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கட்சி தாவியுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக வரதன் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மையை குறைத்துக்கொள்ளாது தலை சிறந்த தலைமையின் கீழ் பயணித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை காத்துக்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் குச்சவெளி பிரதேசத்தின் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தரும், குச்சவெளி பிரதேச சபை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் வேட்பாளருமான சின்ன ஹசன் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் முன்னிலையில் இணைந்து கொண்டார்.
இதன் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினரும் மத்திய குழு தலைவருமான சல்மான் பாரிஸ், முன்னாள் தவிசாளர் ஏ.பி.தௌபீக்,தென்னைமறவாடி வட்டார அமைப்பாளர் நவ்பல் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
0 Comments