Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

ஆரம்பமாகவுள்ளது இராட்சத பலூன்கள் மூலமான உளவியல் போர்! இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றம்



வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியாவுக்கு எதிராக கடந்த வாரம் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பலூன்களைப் பறக்கவிட்டிருந்தனர். இந்தச் செயலுக்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக வடகொரியா தனது எதிர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், தென்கொரியாவுக்கு எதிராக உளவியல் போர் தொடுக்கும் விதமாக 1.2 கோடிக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய 3000க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை பறக்கவிடும் நூதன போர் முறையை மீண்டும் வடகொரியா கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உளவியல் போர் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரு நாடுகளும் 1970 லிருந்து ஒலி பெருக்கிகள் மூலம் ஒரு நாட்டின் எல்லையிலிருந்து மற்றொரு நாட்டுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அதற்கமைய, கொரிய நாடுகளுக்கு இடைப்பட்ட ஒப்பந்தத்தத்தை மீறி, பிரசாரங்களில் தேசத்துரோகிகள் ஈடுபடுகிறார்கள். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக தென்கொரியா மற்றும் அதன் தலைநகர் சியோலுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், சிகரெட் துண்டுகள் மற்றும் குப்பைகள் அடங்கிய 3000க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை எல்லைகள் கடந்து தென்கொரியா மீது அனுப்பப்போகிறோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு நாடுகளும் 1950 ல் கொரிய போரின் போதிலிருந்து, வெறுப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைக் காற்றில் பறக்கவிட்டு, உளவியல் ரீதியிலான போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தென்கொரியாவிலிருந்து சமீபத்தில் வடகொரியாவுக்கு அனுப்பப்பட்ட பலூன்களில் பில்கள், டிரான்சிஸ்டர் ரேடியோ, பழைய கணினி மற்றும் வடகொரியா ஜனாதிபதியை ‘ரத்தக்களரி பன்றி’ என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் அனுப்பி வைத்தனர். இந்த செயல்கள் வடகொரியா ஜனாதிபதியை கோபமடையச் செய்திருக்கின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதும் தென் கொரியாவிலிருந்து வடகொரியாவுக்கு எதிராகக் குப்பைகள் நிறைந்த பலூன்களை அனுப்புவோரைக் காவல் துறையினர் தடுத்து வருவதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலைல், தமக்கு எதிராக அனுப்பப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களைப் பார்த்த வடகொரியா, வடகொரியாவுக்கு எதிரான சகித்துக்கொள்ள முடியாத அவமானம் இது எனத் தெரிவித்துள்ளதோடு, வானத்திலிருந்து இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் தமது தலைக்கு மேலே விழுவதைப் பார்க்கும் வரை தென்கொரியர்கள் திருந்தமாட்டார்கள் எனவும் அந்தக் குப்பைகளை அள்ளும்போது தான் இது எவ்வளவு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் என்பதை உணர்வார்கள் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் 2000ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளுமே துண்டுப் பிரசுரங்கள் மூலம் பதற்றத்தைத் தணிக்கவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டன. 2018 ஆம் ஆண்டு வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் சந்தித்துக்கொண்ட போதும் இதே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இரு நாடுகளும் அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் செய்ற்பட்டுள்ளதுடன், தென்கொரியா மீது இந்த பலூன்கள் எப்போது பறக்கவிடப்படும் என்பதை வடகொரியா இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தத் துண்டுப் பிரசுரங்கள் எங்கள் கோபத்தையும் வெறுப்பையும் நிச்சயம் வெளிப்படுத்தும் என்றும் வடகொரியா தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்னர் 2016இல் வடகொரியா இதே மாதிரியான துண்டுப் பிரசுரங்களை எல்லைகள் கடந்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments