வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி விற்பனை செய்த கும்பல் கைதுசெய்துள்ள்தாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
இன்று வாகரை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கு தயாரான நிலையில் இருந்த ஒரு தொகை மரங்களை வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,
வாகரை காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்களை கடத்தல் இடம்பெறுவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தவகவலையடுத்து குறித்த பகுதியில் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது தென்னை ஓலைக்குள் மறைத்து வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த முதுரை, தேக்கு, கல்ஓதியம், கட்டாக்காலை ஆகிய ஒருதொகை மரங்களை கைப்பற்றியுள்ளதுடன், நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை சட்டவிரோத மரங்களை ஏற்றவதற்கு பயன்படுத்தப்பட்ட கன்டர் ரக வாகனமும், ஒரு மோட்டார் சைக்கிளும், கோடாரி, கத்தி என்பனவும் கைப்பற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.சேனாதீர மற்றும் விசேட அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.பத்துசிறி ஆகியோரின் வழிகாட்டலில் வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments