கொரோனா காரணமாக இந்தியாவில் அமலிலிருந்த பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
கோயில்களில் பிரசாதம் வழங்கக்கூடாது, ஏசி சாதனங்களை இயக்கினால் அதன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சானிடைசர்கள்
கட்டாயம்
இன்று திறக்கப்படும் அலுவலகம் மற்றும் கடைகளுக்கு வெளியே கட்டாயம் சானிடைசர்கள் வைக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வழிபாட்டுத் தலங்களில், பிரசாதம் வழங்கக்கூடாது, புனித நீர் தெளிக்கக்கூடாது, சிலை மற்றும் வழிபாட்டு நூல்களைத் தொடக்கூடாது, ஒரே நேரத்தில் அதிகளவிலான மக்கள் கூடக்கூடாது எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பக்தர்கள் காலணிகளை தங்களது வாகனங்களுக்குள்ளே வைத்துவிட்டுச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
கூட்டம் கூடுவதை தவிர்க்க, வழிபாட்டுத்தலங்களில் பாடல் பாடும் குழுக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்
உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உணவகங்களின் அமர்ந்து சாப்பிடாமல், உணவுகளை வாங்கிச்செல்ல மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். வீடுகளுக்கு உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மற்றும் சமையல்காரர்களுக்கு தெர்மல் சோதனை செய்யப்படும்.
அலுவலகங்கள்
அலுவலகத்தைப் பொருத்தவரை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதி இல்லை. அங்குள்ள உணவகங்களில் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், லிப்ட்களில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், ஒருவருக்கு கொரோனா அறிகுறி தோன்றினால் உடனே அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments