இராணுவத்தை சேர்ந்த இரண்டாயிரம் முதல் மூவாயிரம் பேரை ஒரே இரவில் தான் கொலை செய்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா கூறியிருந்தமை தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அண்மையில் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டது.
மகிந்த ராஜபக்சவின் முதலாவது பதவிக்காலத்தில் கருணா பிரித்தானியாவில் நடைபெற்ற சுற்றாடல் மாநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இலங்கையின் சுற்றுலா அதிகார சபையின் தலைவருக்கு பிரித்தானியாவில் இருந்து கிடைத்த அழைப்பை பயன்படுத்தி கருணா அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இதனடிப்படையில் சுற்றுலா அதிகார சபையின் அதிகாரிக்கு கிடைத்த அழைப்புக்கு ஏற்ற வகையில் புலனாய்வுப் பிரிவினர் போலி கடவுச்சீட்டை தயார் செய்து, கருணாவை பிரித்தானியாவுக்கு செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
பிரித்தானியா சென்றிருந்த கருணா போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி குற்றச்சாட்டில் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டது.
அத்துடன் போலி கடவுச்சீட்டு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அதுவரையில் இலங்கையில் இயங்கிய பிரித்தானிய தூதரகத்தின் விசா பிரிவை இந்தியாவுக்கு மாற்ற பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கருணாவின் போலி கடவுச்சீட்டு தொடர்பாக பிரித்தானிய பொலிஸார், இலங்கையில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அறிவித்திருந்ததுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ராஜபக்ச அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அந்த விசாரணைகள் இடையில் நிறுத்தப்பட்டன.
அத்துடன் அரச புலனாய்வுப் பிரிவினர் கருணாவுக்கு வழங்கியிருந்த துப்பாக்கியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
2007 ஆம் ஆண்டளவில் கந்தளாய் பிரதேசத்தில் அமைந்திருந்த ரகசிய முகாம் ஒன்றில், அரச புலனாய்வுப் பிரிவினர் கருணா குழுவுக்கு 400 தானியங்கி துப்பாக்கிகளை வழங்கியிருந்தனர். அந்த துப்பாக்கிகளில் ஒன்றே ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருந்ததாக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அந்த விசாரணைகளை இடையில் நிறுத்தியது.
இவ்வாறான சூழ்நிலையில், கருணா அம்மான் தற்போது வெளியிட்டிருந்த கருத்து சம்பந்ததாக சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் கூறுவது நகைப்புக்குரியது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 Comments