Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி! ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கும் பெரும் அழிவுதமிழ் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்திகள் மெல்ல மெல்ல இல்லாமல் அல்லது சூழ்ச்சுமமான முறையில் அழிக்கப்படும் தந்திரத்தை அரச எந்திரம் மிக இலகுவாக செய்து கொண்டிருப்பதனை அண்மைய நாட்களில் நிகழும் அரசியல் காய் நகர்த்தல்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள். போருக்குப் பின்னர், வந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் கூட தமிழர்களின் நம்பிக்கை கொஞ்சம் உயிர்ப்படையத் தொடங்கியது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டரசு ஆட்சியை பொறுப்பெடுத்ததன் பின்னர், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் நகர்வுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக இலகுவான வகையில், கையாளும் என்றும், அரசியல் தீர்வில் அரசாங்கத்தோடு இணைந்து தீர்வை விரைவில் பெற்றுவிடுவார்கள் என்றுமே தமிழர்கள் நம்பினார்கள்.

ஆனால், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசை வீழ்ந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியை மாத்திரமே கொள்கையாகக் கொண்டிருந்ததேயன்றி, தமிழர் அரசியல் விவகாரத்தில் 1 வீதத்தை தானும் வெற்றியின் பக்கம் திருப்பவில்லை என்பது வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், 2009ஆம் ஆண்டு புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கும் வரையில் ஈழ அரசியலோடோ அல்லது ஈழப் போராட்டத்தோடோ தொடர்பே இல்லாத நபர்களை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

இங்கே ஈழப் போராட்டத்தில் தொடர்பில்லாதவர்கள் அல்லது ஈழ அரசியல் பின்புலம் இல்லாதவர்கள் ஈழத் தமிழர் அரசியல் பேசக் கூடாது என்பதல்ல வாதம். ஈழ அரசியலில் ஈழப் போராட்டமும் விடுதலைப் புலிகளின் வகி பாகமும் யாது என்பதை புரிந்து, மக்கள் எதை எதிர் பார்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் நபர்களையே அரசியல் அரங்கில் அழைத்து வரப்பட வேண்டும்.

ஆனால், இங்கோ தலைகீழாக நடந்திருக்கிறது. அரசியலுக்கு வந்த நாட்களில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளீர்க்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் விடுதலைப் புலிகள் தொடர்பிலும் ஆயுதப் போராட்டம் தொடர்பிலும் பேசிவருவது தமிழ் தேசிய அரசியலில் பெருத்த அடியாகவே இருக்கிறது.

ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் பேசுவது அவரது தனிப்பட்ட கருத்து என்று வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் அல்ல. அவருக்கு ஆயுதத்தின் மீதோ, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட அணுமுறை தொடர்பிலோ அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்ப்பதற்கு உரிமையுண்டு. அது அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக இருக்கும் வரை தாராள உரிமையினைப் பெறுகிறார்.

எவரையும் கட்டாயப்படுத்தி நீங்கள் இதை ஏற்றாக வேண்டும் என்று குறிப்பிடது அழகல்ல. ஆனால் சுமந்திரன் தற்போது இருக்கும் இடம், அவரின் பொறுப்பு என்பன என்ன என்பதை ஆராய வேண்டும். விடுதலைப் புலிகளின் அரசியல் பலமாக கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருந்து கொண்டு சுமந்திரன் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக பேசுவதை ஈழத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

கூட்டமைப்பு என்பது எதற்காக உருவாக்கப்பட்டது அதன் பின்னணி என்ன என்பது தொடர்பில் தமிழ் மக்களும் சரி சிங்கள மக்களும் சரி தெரியாதவர்கள் அல்ல. ஆனால், மீண்டும் மீண்டும் சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம், விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்பது தொடர்பில் மாறுபட்ட அரசியல் பேச்சுக்களை வரலாற்றை மாற்ற நினைப்பதில் ஏதோவொரு நிகழ்வு தொக்கி நிற்பதனை மிக நுண்ணாய்ந்து கொள்ள முடியும்.

குறிப்பாக, ஈழத் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாது செய்து, அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடியோடு திசைமாற்றும் மிகப் பெரும் கைங்கரியத்தை மேற்கொள்கிறார்கள். ஈழ அரசியலோடு தொடர்பற்றவர்களை, ஈழப் போராட்டத்தினால் பாதிக்கப்படாதவர்களை, ஈழ விடுதலையின் தார்ப்பரியத்தைப் புரிந்து கொள்ளாதவர்களை, உள்ளே கொண்டுவந்ததன் நோக்கம் சிதைப்பது, அழிப்பது, தமிழர்கள் விரும்பாதவற்றை திணிப்பது போன்ற செயற்பாடுகளை இலகுவாக செய்வதற்காகவே.

சந்திரிகா அம்மையார் ஆட்சியின் போது எவ்வாறு லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு சூழ்ச்சியை கட்டமைத்து, அதன் வாயிலாக பயங்கரவாத முத்திரை குத்துவதற்கான வேலைகளை செய்தாரோ, எவ்வாறு ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் பேரினவாத அரசுக்காக செய்து கொடுத்தாதோ அதையே தான் இன்று சுமந்திரன் போன்ற முக்கிய நபர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றங்களை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அதேநேரம், தங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தற்போது ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளை மிகமிக சாதுர்யமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில், இந்தப் பின்னணி இன்று நேற்று உருவாக்கப்பட்டது அல்ல, முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது. மிக நிதானமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதில், புலம்பெயர் தமிழர்களுக்கும், களத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளை உருவாக்கி பிரிப்பது, விடுதலைப் புலி ஆதரவு எதிர்ப்பு என்னும் பிளவை உருவாக்குவது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளை பிளவுபடுத்துவது, வடக்கு கிழக்கு என்னும் பிரிவினை வாதத்தை ஆழப்பதித்து விடுவது, போன்ற ஏராளமான வேலைகள் நகர்த்தப்படுகின்றன.

முன்னர் ரணில், தரப்போடு உள்ளார்ந்தமாக இருந்த பிணைப்பு இப்போது மகிந்த கோட்டாபய ராஜபக்ச தரப்போடு நகர்த்தப்படுகிறது. அதற்கு மூத்த ஊடகவியலாளராக சொல்லப்படும் முக்கியமான ஒருவர் பின்னணியிலிருந்து செயலாற்றுவதும் கூடுதல் தகவல்.

எவ்வாறாயினும், தற்போது பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்ச்சியை ஈழ, புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உடைக்கப்போகின்றார்? திசை மாறிப் நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் எவ்வாறு மாற்றுவது? புல்லுருவிகளாக மாறியிருக்கும் நபர்களை எவ்வாறு கையாளுவது? அவர்களை பொது மக்களிடையே தோலுரித்துக் காட்டுவது? போன்ற ஏராளமான நகர்வுகளை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை வகுக்காது விடின், இன்னும் சிறிது காலத்தில் முள்ளிவாய்க்காலில் இழந்ததை விடவும் பல மடங்கு இழக்க வேண்டிவரும்.

இதை எச்சரிக்கையாக கையாள்வது தற்போதைய கட்டாயமாகும். அரசியல் அவதானிகள் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்பார்களாயின் நிலைமை மோசமாகிவிடும். களத்தில் இறங்கி வேலை செய்யாது இளைஞர்கள் முகநூல்களில் பதிவுகள் போடுவதோடு நிறுத்தாமல் தேர்தல் காலங்களில் விரிவான வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டிய சூழல் வரவேண்டும்.

Post a Comment

0 Comments