சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக விடுதலைப்புலிகளை கொன்றது குறித்தும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இராணுவத்தினரை கொன்றது தொடர்பாகவும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் மிகவும் உற்சகமாக பேசும் நிலைமை ஏற்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த நிலைமையானது ராஜபக்ச அணியின் போலியான தேசப்பற்றை காட்டுகிறது. அதிகார பலத்திற்காக அவர்களால் எதனையும் மூடி மறைக்க முடியும்.
அதிகாரத்திற்காக எந்த அணியுடனும் கூட்டு சேருவார்கள். இவர்கள் தேசத்தின் மீது பற்றுக்கொண்டவர்கள் என்பதை விட அதிகார ஆசை பிடித்தவர்கள் என்பதை ஒப்புவித்து வருகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட சிலர் 20 முதல் 30 ஆண்டுகள் விளக்கமறியலில் இருந்து வரும் நிலைமையில், ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றதாக கூறும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாறுகின்றனர்.
ராஜபக்ச அணியினருக்கு ஆதரவானர்கள் என்றால் சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டது என்பதுடன் அவர்கள் தேசப்பற்றாளர்கள். கருணாவின் இந்த கருத்து தொடர்பான தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 Comments