Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

வலி சுமந்து வாழும் அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய புலம்பெயர் உறவுகள்!அரசுகளின் அநீதிகளால் தான் அகதிகள் உருவாக்கப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகம் அன்றாடம் அகதிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இன, மொழி, நிற மதம் என்று பாகுபாடு காட்டும் பல்வேறு அரசுகளும் தம்முடைய சொந்த மக்கள் என்று சொல்லிக் கொண்டே நாடற்றோரை உருவாக்கியுள்ளனர்.

இதன் விளைவாகவே இன்று உலகம் முழுவதும் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதி என்ற அவல வாழ்வோடு கொரோனா தந்த பேரிழப்பால் செயவதறியாது நிலைகுலைந்து நிற்கிறார்கள்.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சுவிஸ் ஆலமரம் என்ற மனிதநேய தன்னார்வ அமைப்பின் ஆதரவுடன் சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈழ அகதிகளுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்புச் செயற்பாடுகளினால் அகதிகளாக்கப்பட்ட மக்கள் தமிழகத்தில் தங்கியுள்ளோம். அதைப்போல உலகமெங்கும் ஈழத் தமிழ் மக்கள் பல லட்சம் பேர் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் எங்களுக்கு கொரோனா இன்னொரு போர் வாழ்வை தந்திருக்கிறது. உயிருக்கு தஞ்சம் கேட்டு தாய் நிலத்தை விட்டு வந்த எங்களை மரணம் துரத்துவது போல் கொரோனாவின் வருகை அமைந்துள்ளது.

சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்டதால் வலி சுமந்து வாழும் எம்மைப் போன்ற அகதிகளுக்கு கொரொனா இன்னொரு வலியாகும். கொரோனா காலம் என்பது இன்னொரு போர்க்காலமாக, இன்னொரு நெருக்கடியாக எம்மை சூழ்ந்து கொண்டுள்ளது.

அதிலும் இந்தியா, மலேசியா, இந்துநோசியா போன்ற நாடுகளில் நாங்கள் அகதிகள் என்ற அங்கிகாரமும் இல்லாத நிலையில் வாழ்வாதாரத்திற்கு வழியேதும் கண்ணுக்கு எட்டிய தூரம் காரிருளாய் காட்சி தருகின்றது.

முழுமையான பொதுமுடக்கம் எத்தனையோ கோடிக்கணக்கானோரை வறுமைக்கு இழுத்து வந்திருக்கும் நிலையில் வெறுங்கையோடு கடல் கடந்து அகதி என்ற பட்டத்தை மட்டுமே சொத்தாக கொண்ட எங்களது வாழ்க்கை நூலறுந்த பட்டம் போல் ஆகியிருக்கிறது.

புலம்பெயர் தேசங்களில் கொரோனாவின் நெருக்கடிக்கு இடையிலும் மரணங்களின் மத்தியிலும் எம் உறவுகள் இந்த நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். எந்த நிலையிலும் தங்கள் இரத்த உறவுகளுக்கு உதவ வேண்டும் என்கின்ற வாஞ்சை எமது மக்களிடம் இருக்கும் வரை எந்த துயரக் கடலையும் கடந்து கரை சேர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை உயிர்பெறுகின்றது.

அரசுகளின் தடுப்புக் கரங்களை தாண்டி எங்கள் உறவுகளின் கரங்கள் எம்மை கரைசேர்க்கும் துடுப்புகளாக விளங்குகின்றன.

கொரோனா கூட நம்முடைய சொந்த நிலத்தில் வாழ வேண்டிய இயல்பான ஒரு வாழ்க்கையைத்தான் வலியுறுத்தியுள்ளது. தாயக மண்ணில் கால் பதிந்து நின்று மண்ணின் உரத்தோடு கொரோனாவை எந்த சமூகமும் சந்தித்து வெல்ல முடியும்.

நாடு திரும்பும் அவாவில் உள்ள அகதிகள் நாடு திரும்ப வேண்டும். நாடு திரும்ப முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் தமக்கான பாதுகாப்பான சூழல் உருவாகாதவரை யார் கூவி அழைத்தாலும் நாடு திரும்ப முடியாது இதுவே யதார்த்தம்.

போர் நிறைவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழர் தாயகத்தில் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புப் போரை சிறிலங்கா அரசு பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்திவருவதை ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளைமென்ட் யலெட்சோசி வியுல் கடந்தவாரம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளைமென்ட் யலெட்சோசி வியுல் தனது அறிக்கையில் தமிழ் மக்களை கட்டுப்படுத்தும் மற்றும் அச்சுறுத்தும் பல்வேறு விடயங்களைப் பட்டியிலிட்டுள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு எத்தகைய கொடிய ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி முன்வைத்த விடயங்கள் குறித்து சர்வதேச சமூகம் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.

குண்டு சத்தங்கள் இல்லாமல் இன அழிப்பு நடந்துவரும் எமது தாயக மண்ணுக்கு நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது என்ற செய்தியையும் இவ்வறிக்கை வெளிப்படுத்துகின்றது.

இந்நிலையில் முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் என ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் தமிழகத்தில் வாழ்ந்துவரும் நிலையில் கொரோனா பெருந் தொற்றையும் எதிர்கொண்டு நினைவுகளையும் வலிகளையும் தாங்கி உறவுகளின் துணையுடன் எதிர்காலத்திற்கென்று உயிர் சுமந்து நிற்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments