Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

சித்திரவதையால் கொல்லப்பட்ட தந்தை மகன்! பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்



இந்தியாவின் தூத்துக்குடியில் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிறையில் இருந்த தந்தையும், மகனும் 22, 23ஆம் திகதிகளில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் ஜோர்ஜ் ப்ளொய்ட் படுகொலைக்கு இணையானது எனத் தெரிவித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையில்,

சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள், விளையாட்டுத்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் இவ்வாறு பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயராஜ் (55-வயது), அவரது மகன் பென்னிக்ஸ் (31-வயது) ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

டுவிட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ், இவர் குறித்த பகுதியில் பனைமரக்கட்டைகள் விற்பனை செய்யும் கடையொன்றை நடத்திவந்துள்ளார்.

அவரது மகன் பென்னிக்ஸ் தந்தையின் கடை அருகிலேயே கைத்தொலைபேசி விற்பனை நிலைமொன்றை நடத்தி வந்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கடந்த 19ஆம் திகதி இரவு அந்த பகுதிக்கு ரோந்து நடடிவக்கையில் ஈடுபட்ட பொலிஸார், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்குள்ள கடைகளை மூடுமாறு தெரிவித்துள்ளனர்.

இதற்கு பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதையடுத்து பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் மீது சாத்தான்குளம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 22ஆம் திகதி இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், இதையடுத்து அவர் கோவில்பட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜூக்கு கடந்த 23ஆம் திகதி காலை 6 மணியளவில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மறுநாள் உயிரிழந்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகனின் அடுத்தடுத்த திடீர் மரணம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பொலிஸார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பாக வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அவர்களின் இறப்புக்கு நீதி வேண்டி அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments