ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே அன்றி கட்சியின் தலைமையகத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதல்ல என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று அந்த கட்சியின் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க,
வீடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாம் சமையல் எரிவாயு கொள்கலன் அல்ல. நாங்கள் கொள்கையுடன் வருகின்றோம். நாட்டின் கொள்கை தொடர்பான வாத விவாதங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்யும் வரத்தை பெற்று தருமாறும் கோரியுள்ளார். நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்தது.
குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் ஒரு வருடத்திற்குள் வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டது. அரசாங்கத்துடன் நாங்கள் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
நாங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மொட்டுக் கட்சியுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மக்களுடனேயே எமது உடன்படிக்கை இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments