ஒரு நாடு இரு தேசம் என்கின்ற கட்சியிடம் வழிமுறையோ பொறிமுறையோ இல்லை என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியா பெரியார்குளத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தலைமைகள் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துவதும் கிடையாது சந்தர்ப்பங்களை உருவாக்கி பயன்படுத்துவதும் கிடையாது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு பொன்னான வாய்ப்பு. அதனை எங்களினுடைய தமிழ் தலைமைகள் என கூறுபவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம் நாங்களும் அந்த சூழலை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் இலக்கு உள்ளது. அதற்கான வழிமுறை உள்ளது. அதனை அடைவதற்கான பொறிமுறை உள்ளது. இதனை நாம் கற்பனையில் கூறவில்லை. அனுபவத்தினூடாகவே சொல்கின்றோம்.
ஆனால் இன்று ஒரு கட்சி ஒரு நாடு இரு தேசம் என்கிறது. அவர்களிடம் வழிமுறையும் இல்லை பொறிமுறையும் இல்லை. அரசியலில் மக்களை உசுப்பேற்றுவதற்காகவும் சூடேற்றுவதற்காகவும் வைக்கப்பட்ட விடயங்களே தவிர அவர்களிடம் எதுவும் இல்லை.
அவர்களிடம் கொள்கை என்ன என்றால் சமஸ்டி என்கின்றனர். அந்த சமஸ்டி என்ன என்றால் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கின்றர்ர்கள். இதைத்தான் நாங்கள் நீண்ட காலமாக சொல்லி வருகின்றோம்.
அவ்வாறாயின் அமைச்சராக இருந்த நாங்கள் ஏன் அதனை அடையவில்லை என மக்கள் கேட்கலாம். அதனை அடைவதற்கு எங்களிடம் போதிய வாக்குப்பலமோ ஆசனப்பலமோ இல்லை. அந்த பலம் இருந்தால் எங்களால் ஓரிரு வருடங்களில் இதனை தீர்க்க முடியும்.
ஈ.பி.டி.பியின் கொள்கை கொள்ளையடிப்பதோ கொலை செய்வதோ அல்ல. வன்முறைக்கூடாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதோ அல்ல. கடந்த காலத்தில் எங்கள் மீது வசைபாடப்பட்டது. ஒரு சில சம்பவங்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால் எல்லாம் அல்ல. அவ்வாறு நடந்தது கட்சியின் கொள்கையோ கட்சியின் வேலைத்திட்டமோ அல்ல. அது தனிநபர்களின் செயற்பாடு. ஆனால் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அதற்கான தார்மீக பொறுப்பை எடுத்தாகின்றேன்.
சந்திரிக்கா காலத்தில் இனி எமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ ஆனால் ஒரு யாப்பை கொண்டு வந்தோம். ஆனால் அது துரதிஸ்டவசமாக நாடாளுமன்றத்தில் எரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் இன்று சிலர் புதிய அரசியல்யாப்பு என்று சொல்கின்றார்கள். புதிய அரசியல் யாப்பு இந்த நாட்டில் தற்போதைக்கு சாத்தியமில்லை. ஏனெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. சர்வஜன வாக்கெடுப்புக்கு போகவேண்டும்.
அது இந்த காலத்தில் சாத்தியமில்லை. ஆனால் நாங்கள் முன்வைத்துள்ள அரசியல் தீர்வுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு தேவையில்லை. சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. ஏனெனில் அது எங்கள் அரசியல் யாப்பில் உள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் ஏற்படுத்தப்பட்டது. ஆகவே 13 திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி முன்னோக்கி செல்லலாம் என நம்புகின்றேன். அதற்கு எனக்கு பலம் தேவை. கூட்டமைப்பு போல் 22 அல்லது 18 கேட்கவில்லை. வடக்கு கிழக்கில் 5 அல்லது 6 ஆசனம் கிடைத்தால் இதனை நடைமுறைப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments