Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாண மாவட்டத்தில் சௌபாக்கியா அடிப்படையிலான விரைவுபடுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி.



சௌபாக்கியா அடிப்படையிலான விரைவுபடுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி திட்டத்திற்கு 12117 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக வடக்கு மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ் சிவகுமார் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'சௌபாக்கியா' அடிப்படையிலான விரைவுபடுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சௌபாக்கியா வேலைத்திட்டமானது இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒன்று கமநலசேவைகள் திணைக்களத்தினூடாக விதைகள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதேபோன்று மாகாண விவசாய திணைக்களத்தினூடாகவும் விதைகள் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திற்கென 10ஆயிரம் விதை பக்கற்றுகளும் அதேபோல் ஏனைய மூன்று மாவட்டங்களுக்கும் 5 ஆயிரம் விதை பக்கற் என்ற அடிப்படையில் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதைகளானது தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது சாதாரண குடும்பத்தினரும் இதனைப்பெற்று தமது வீட்டு தோட்டத்திலேயே பயிரினை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த வீட்டு தோட்டம் திட்டமானது தற்பொழுது முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உணவு பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத நிலையினை ஏற்படுத்த இந்த வீட்டுத்தோட்ட திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கின்றது. ஏனெனில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து உணவுபொருட்களினை இறக்குமதி செய்கின்றோம். அந்த உணவுகள் அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கின்றது. தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏனைய நாடுகளிலும் உணவு உற்பத்தியில் பெரும் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது.

எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களை உரிய முறையில் நுகர்வோரை சென்றடையும் செயற்பாடு மிகவும் பின்னடைவாக காணப்படுகின்றது என தெரிவித்த மாகாண பணிப்பாளர் ஒவ்வொருவரும் இந்த சௌபாக்கிய திட்டத்தினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்மால் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப்பொருட்களை வீட்டுத் தோட்டங்களில் உற்பத்தி செய்வதன் மூலம் பூரணமான உணவு உற்பத்தியை நாங்கள் பெருக்கி கொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளதெனவும் தெரிவித்தார்.

'சௌபாக்கியா' வீட்டுத் தோட்டத்துக்கு மேலதிகமாக சௌபாக்கியா அடிப்படையிலான விரைவுபடுத்தப்பட்ட தேசிய உணவு உற்பத்தி திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் 16 உப பயிர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.  அவ் உப பயிர்களையும் விவசாயிகள் நடுவதற்கு விதைகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை விவசாயி ஒருவர் கால் ஏக்கரில் நடுவதாக இருந்தால் அதற்குரிய விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அதேநேரத்தில் கால் ஏக்கர் தொடக்கம் அதற்கு மேலதிகமான ஏக்கரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள தாயின் 50 வீதமான விதைகளும் இலவசமாக மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக அவர்கள் செய்யும் ஒவ்வொரு கால் ஏக்கர் அல்லது அதற்கு மேலாகவும் பயிற்செய்கை மேற்கொள்ளப்படுமிடத்து விதைகள் நடுகை பொருட்கள் மானியமாக அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது. 50 வீதமான செலவு அரசாங்கத்தினாலும் விவசாயிகள் 50 வீதம் தமது பொறுப்பில் செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் அந்த விதைகளை கொள்வனவு செய்து நாட்டிய பின்னர் விவசாய போதனாசிரியர் குறித்த இடத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

இது தொடர்பாக திணைக்களத்தினால் சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெங்காயசெய்கை விஸ்தீரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் அதிகளவான விவசாயிகள் வெங்காய செய்கைக்காக விண்ணப்பித்துள்ளார்கள்.  மொத்தமாக 7031 பேர் வெங்காய செய்கைக்காக விண்ணப்பித்திருக்கும் அதேநேரத்தில் மற்றைய பயிர்களிற்கு விண்ணப்பித்தோர்களையும் சேர்த்து 12117 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். அதாவது மொத்த பரப்பளவு 5990 ஏக்கர் நிலப்பரப்பில் பயிற்செய்கையினை மேற்கொள்வதற்கு விவசாயிகள் விண்ணப்பித்துள்ளார்கள் அதற்கு ஏற்படக்கூடிய செலவாக 518 மில்லியன் ரூபாய் காணப்படுகின்றது.

குறித்த பயிர்களின் உற்பத்தியினை நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பில் கவலையடைய தேவையில்லை. குறிப்பாக வெங்காயத்திற்கான சந்தை வாய்ப்பு தற்போது கூடுதலாக காணப்படுகின்றது. நிச்சயமாக எமது எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து எமக்கு சின்னவெங்காயம் மிகக் குறைந்த அளவிலேயே பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

எனவே எமது வடக்கு விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்தியானது பெரும் பயனாக அமையும் விவசாயிகளின் உற்பத்திக்கும் கூடிய சந்தை வாய்ப்பு கிடைக்கும் என அரசாங்கத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது எனவே விவசாயிகள் எந்தவித தயக்கமும் இல்லாது குறித்த சௌபாக்கிய வேலைத்திட்டத்தினை பயன்படுத்திச் செயற்படுத்துவதன் மூலம் தமது பொருளாதாரத்தை முன்னேற்றிகொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments