Header Ads Widget

இணையத்தளம் வேண்டுமா?

Ticker

6/recent/ticker-posts

2015ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அராஜக ஆட்சியே தற்போது கோட்டாபய ஆட்சியிலும்



நாட்டில் 2015ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதியில் இருந்த அராஜக ஆட்சியை முறையே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற ஆரம்பித்துள்ளதாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த ஆட்சிமுறைக்கு மத்தியில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாடு கட்டுப்பாட்டை இழந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த அரசாங்கத்தை பொதுத் தேர்தலின் ஊடாக மக்கள் கவிழ்க்க முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாடு கட்டுப்பாட்டை இழந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்களை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டையும் பாதுகாக்கவில்லை, மக்களையும் பாதுகாக்கவில்லை. தற்போது இரண்டாம் அலை பற்றி வைத்திய நிபுணர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று எமக்குத் தெரியாது. கடந்த ஜனவரி 24 ஆம் திகதி விமான நிலையங்களை மூடுமாறு சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். எனினும் வேட்புமனு தாக்கல் செய்யும் வரை அரசாங்கம் அதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை எதிர்பார்க்காதளவிற்கு அதிகரித்துள்ளது. அரசாங்கத்தால் நிவாரணங்கள் பற்றி பேசப்படுகின்றதே தவிர அவை வழங்கப்படுவதில்லை. மக்களிடம் காண்பிப்பதற்காக அறிக்கைகளை மாத்திரம் வெளியிடுகின்றனர். தற்போது காப்புறுதிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கம் கட்டுப்பாடற்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

தனிமைப்படுத்தல் சட்டம் சாதாரண மக்களுக்கும் தனவந்தர்களுக்கும் வெவ்வேறு முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேர்தல் சட்டங்களும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. தேர்தலை நடத்துவதற்காக இல்லாமல் நடாத்தாமலிருப்பதற்கான சட்டங்களே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேர்தல் சட்டங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும்.

அவ்வாறு எந்த கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்ல. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்படக் கூடும் என்று கூறுகின்றார். மறுபுறம் ஏனைய சில சுகாதார அதிகாரிகள் தேர்தலை நடத்தலாம் என்று கூறுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவை தூற்றியவர்கள் தற்போது அதனை சரி செய்வதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிச கட்சியினர் மீது பாரதூரமான தாக்குதல்களை முன்னெடுத்தனர். இவற்றின் மூலம் 2015 க்கு முன்னர் காணப்பட்ட ஆட்சி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு பொதுத் தேர்தலில் மக்கள் சிறந்த பதிலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments